கரூர் : கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில், திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கரூர் மாநகர செயலாளர் கனகராஜ் தலைமையில் தான்தோன்றி மலை பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நேற்றிரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக செய்தி தொடர்பு துணைச் செயலாளர் பொள்ளாச்சி சித்திக், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான், கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "கரூர் மாவட்டத்திற்கு கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் ரூ.3,000 கோடி அளவிக்கு அரசு வளர்ச்சி மற்றும் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu) கரூர் மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கேட்டவுடன் அரசுத் திட்டங்களை நிறைவேற்றி தருகிறார்கள். அதிலும், குறிப்பாக வழங்கிய திட்டங்களை விரைவாக செயல்படுத்தக்கூடிய அந்த பணிகளையும் முன்னெடுத்து செல்கிறார்கள்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற வெற்றியை பெற்றுத் தந்த தமிழக முதலமைச்சர், வரக்கூடிய 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு திட்டங்களை தீட்டி, அதற்கான பணிகளை முதலமைச்சர் துவக்கியுள்ளார்.
திமுக அரசுக்கு வலு சேர்க்கும் வகையில், அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற வாக்களித்த மக்கள், எதிர்வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் திமுக தலைவர் நிறுத்துகின்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தமிழகம் முன்னுதாரணமாக இருக்க திமுக அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தி வருவதால் எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் அங்குள்ள அரசியல் கட்சிகள் திமுக அரசின் திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து வாக்கு சேகரிக்கின்றன.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் கோடிக்கணக்கான மகளிர் பயன் பெற்று வருகின்றனர். வயதான முதியவர்களை காக்க மக்களைத் தேடி மருத்துவ திட்டம், நம்மை காக்கும் 48 மற்றும் மாணவர்களுக்கு நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம் என வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழக முதலமைச்சர் சிந்தித்து, சிந்தித்து ஒவ்வொரு நாளும், தமிழக மக்களின் நலனுக்காக செயலாற்றி வருகிறார் என செந்தில் பாலாஜி பேசினார்.
இதையும் படிங்க :பூட்டியிருந்த வீடு.. சுவிட்ச் ஆஃப் ஆன ஃபோன்.. நடிகை கஸ்தூரிக்கு சம்மன் கொடுக்க சென்ற போலீசார் ஏமாற்றம்!
"அதிமுக ஆட்சிதான்":இதனிடையே, கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கரூர் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக அமைப்பு செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "தமிழக வாக்காளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதை பார்த்து வாக்களிப்பார்கள். அதேபோல சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை பார்த்து வாக்களிப்பார்கள்.
அதிமுகவுக்கு தேர்தலில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. அரசியல் கட்சிகள் என்றாலே தேர்தலில் தோல்வியை சந்தித்து தான் ஆக வேண்டும். அதிமுக என்ற பெரிய இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது.
அதிமுகவில் ஆட்சி காலத்தில் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்திற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கவில்லை குறைந்த சதவீதத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சரை தமிழக மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற நிலை தற்பொழுது தமிழகத்தில் இல்லை. தொலைக்காட்சி வாதங்களில் பொய்யான பிரச்சாரத்தை திமுகவினர் பரப்பி வருகின்றனர்.
அதிமுக தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை அடைந்தால், மீண்டும் அது அடுத்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடையும். அதேபோல தான் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றால் அடுத்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்பது வரலாறு. அதிமுக தொண்டர்கள் தைரியமாக இருங்கள். 2026ம் ஆண்டு ஆட்சி அமைக்கப்போவது அதிமுக தான். திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிட்டு கூறும் அளவுக்கு எந்த சிறந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
விளம்பரத்தில் தான் திமுக ஆட்சி கவனம் செலுத்தி வருகிறது அரசியலில் எப்பொழுதும் ஜாம்பவானாக எந்த அரசியல் கட்சியும் தொடர்ந்து நீடிக்க முடியாது சூழ்நிலைகள் மாறும். எனவே 2026 இல் எடப்பாடி யார் மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பார். அதற்காக சிறப்பான கூட்டணி தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும்" என பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்