தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழ் கடவுள் முருகன் எங்களோடு தான் உள்ளார்" - அமைச்சர் சேகர்பாபு! - MINISTER SEKAR BABU

தமிழ் கடவுள் முருகன் எங்களோடு தான் உள்ளார்... மத்திய அமைச்சர் எல்.முருகன் நினைப்பது ஒருபோதும் நடக்காது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அமைச்சர் சேகர்பாபு - கோப்புப்படம்
அமைச்சர் சேகர்பாபு - கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2025, 1:41 PM IST

சென்னை:மும்மொழிக் கொள்கையை திணக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே சேகர்பாபு ஆய்வு செய்தார்.

அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஒன்றிய அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினஅ கலந்து கொண்டு கண்டன உரை ஆற்ற இருக்கிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர் என்றார்.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, "தமிழ்நாட்டை வேறு கோணத்தில் பார்த்து விடாதீர்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஒன்றிணைந்து தமிழக முதல்வர் தலைமையில் எழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். எடுத்த நடவடிக்கையில் இரும்பு மனிதர் போல் உறுதியாக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர். புதிய கல்விக் கொள்கையிலும் உறுதியாக இருப்பார்" என்றார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, "எல்.முருகன் பாஜக தலைவராக இருந்தபோது வேல் யாத்திரை நடத்தி புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அவர் வேல் யாத்திரைக்கு பிறகு தான் தமிழ்நாட்டு மண்ணில் திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கி காண்பித்தார் நம்முடைய முதல்வர். அண்ணாமலை ஆன்மீகத்தை கையில் எடுத்து ஏதாவது ஒரு வகையில் தமிழ்நாட்டை கைப்பற்றி விடலாம் என்று காவடி கூட எடுத்துப் பார்த்தார். ஆனால் தமிழ்நாடு மக்கள் 40 தொகுதிகளையும் திமுகவிற்கு என்று பதில் அளித்தார்கள்.

தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி இந்த ஆட்சி. இந்த ஆட்சியைப் போல் வேறு எந்த ஆட்சியிலும் தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்தது கிடையாது. அறுபடை வீடுகளை புனரமைக்கும் பணிக்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். திருப்பரங்குன்ற சம்பவத்தை கையில் எடுத்து அரசியலாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இனத்தால் , மொழியால், மதத்தால் தமிழ் நாட்டு மக்களை பிளவு படுத்தி பார்க்க முடியாது. மதுரை மண்ணின் மக்கள் ஒற்றுமையாக உள்ளனர். மாமன் மச்சானாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். சங்கிகள் தான் திருப்பரங்குன்ற சம்பவத்தை பெருசாக்க நினைக்கிறார்கள். இது ராமானுஜரின் மண் ஒற்றுமைக்கு விலை தர முடியாத மண். எல்.முருகனின் கனவு பகல் கனவாக மாறும். தமிழ் கடவுள் முருகர் எங்களோடு தான் உள்ளார்" இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details