சென்னை: நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தின் போது தேர் வடம் அடுத்தடுத்து அறுந்து விழந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பி பேசு பொருளாகிய நிலையில், இது குறித்து இன்று கூடிய தமிழக சட்டசபையின் கேள்வி நேரத்தின் போது கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
அப்போது, நெல்லையப்பர் கோயிலில் தேர் இழுக்கும் போது கயிறு சரி இல்லை என்று அங்கிருப்பவர்களும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் செய்தி வந்தது. அந்த தேருக்கு இரும்பு சக்கரம் மாற்றப்பட்டு இருக்கிறது. திருவண்ணாமலை திருக்கோயிலில் தேரை இழுப்பதற்கு இரும்பு சங்கிலிகள் இருப்பதை போல எல்லா தேரோட்டங்களிலும் இரும்பு சங்கிலிகளை அமைத்து அதை இழுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை அறிய விரும்புவதாக கேள்விகளை முன்வைத்தார்.
இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "ஆசியாவில் இருக்கின்ற மிகப்பெரிய தேர்களில் மூன்றாவது தேர் திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் தேர். 28 அடி நீள, அகலம் கொண்ட 80 அடி உயரமுள்ள தேரானது திருவிழாவின் 9 ஆம் நாள் உற்சவத்தின் இறுதி நாளாக நேற்றைக்கு தேர் வடம் பிடித்து இழுக்கின்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
திருத்தேர் சக்கரத்தில் முன்பகுதியில் வைக்கப்பட்ட தேர் கட்டை அகற்றப்பட்டு பின்னாலிருந்து நெம்புகோல் தருவதற்கு முன்பாகவே பக்தர்கள் பக்தி பரவசத்தால் ஒட்டுமொத்தமாக வடத்தைப் பிடித்து இழுத்ததன் காரணமாக தேர் வடம் அறுந்துள்ளது.