தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை உருவாக்க முடியாது" - நெல்லை இந்து மக்கள் கட்சி நிர்வாகி விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி பேச்சு! - NEET EXAM

Minister Regupathy: தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை உருவாக்க முடியாது. ஒருபோதும் தமிழக அரசு அதை அனுமதிக்காது என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி புகைப்படம்
அமைச்சர் ரகுபதி புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 5:12 PM IST

Updated : Jun 12, 2024, 6:18 PM IST

புதுக்கோட்டை: காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தில் தண்ணீர் சேமித்து வைக்கும் இடமான கவிநாடு கண்மாய் 1,200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை தூர்வார வேண்டும் என்றும், கருவேல மரங்கள் சூழ்ந்து இருப்பதை அகற்ற வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

அமைச்சர் ரகுபதி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியார் அமைப்புடன் இணைந்து கவிநாடு கண்மாயைத் தூர்வாரும் பணியையும், கருவேலமரங்கள் அகற்றும் பணியையும் இன்று அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், எம்பி எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தற்போது ஐந்து பொக்லைன் இயந்திரம் கொண்டு இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “தனியார் அமைப்புடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து கவிநாடு கண்மாயைத் தூர்வாரும் பணியையும், கருவேலமரங்கள் அகற்றும் பணியையும் இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த பணி நிறைவடைந்தவுடன், வெளிநாட்டுப் பறவைகள் வரும் இடமாகவும் இது மாற்றப்பட உள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் காவேரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டாலும் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறவில்லை. அதனால் தான் இந்தப் பணிகள் தொய்வாக நடந்து வந்தது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று, பணிகள் விரைவில் முடிவடையும். தேவைப்பட்டால் நீர்வளத்துறை சார்பில் அந்த நேரத்தில் மீண்டும் தூர்வாரும் பணியும் நடைபெறும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் தூர்வாரும் பணிகள் எவ்வாறு நடைபெற்றது என்பது அந்தந்த பகுதி மக்களுக்குத் தெரியும். மழை ஆரம்பிக்கின்ற நேரத்தில் தான் கடந்த காலத்தில் தூர்வாரும் பணி நடைபெறும். மழை தொடங்கியவுடன் பணிகள் நிறுத்தப்பட்டு, நிதிகள் செலவிடப்பட்டதாக கணக்கு எழுதப்படும். ஆனால், திமுக அரசு முறையாக தூர்வாரும் பணியை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் காடுகளை வளர்ப்பதற்கு மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தமிழக முதலமைச்சர் காடுகளை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்று முக்கியத்துவம் அளித்து செயலாற்றுகிறார்.

தற்போது காடுகள் இருக்கும் பரப்பளவு அதிகரித்துதான் உள்ளது, குறையவில்லை. நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் அகற்றப்பட்டாலும், அகற்றப்பட்ட மரங்களுக்கு நிகராக பத்து மடங்கு மரங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர், தைலம் மர காடுகளால் பாதிக்கப்படுவதாகக் கூறியிருந்தார்கள். வனத்துறை சார்பில், பயிரிடப்பட்ட தைலம் மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களைப் பறிமுதல் செய்து, எங்கேயும் சோலார் பிளான்ட்கள் அமைக்கப்படுவது கிடையாது. அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர்களிடமே அந்த நிலம் மீட்டுக் கொடுக்கப்படும்.

நீட் தேர்வு குளறுபடியை இன்று நாடே பார்த்துக் கொண்டுள்ளது. இதுகுறித்து வழக்கும் நடைபெற்று வருகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் மாணவர் சேர்க்கையை அனுமதிக்கக் கூறியுள்ளது. இருப்பினும், இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இது முடிந்த பிறகு நீட் தேர்வு ஒரு முடிவுக்கு வரும்.

கலவரம் ஏற்படுத்தினால் தான் பாஜக வளர முடியும் என்று இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூறிய ஆடியோ வைரலான நிலையில் இதுகுறித்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை உருவாக்க முடியாது. ஒருபோதும் தமிழக அரசு அதை அனுமதிக்காது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சட்டவிரோதமாக மதுவிற்பனை? கண்டிகை அரசுப் பள்ளி அருகே முகம் சுழிக்கும் செயல்.. பொதுமக்கள் கோரிக்கை! - Remove TASMAC near Vandalur

Last Updated : Jun 12, 2024, 6:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details