புதுக்கோட்டை:புதுக்கோட்டைநகராட்சியில் மாவட்ட ஊரக நகரமைப்பு அலுவலகத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் இன்று (ஜூலை 11) திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்வதற்கு அதில் உள்ள சாதக பாதகங்களை எடுப்பதற்காக முதலமைச்சர் குழு ஒன்றை அமைத்துள்ளார்.
அந்த குழு கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். ஒரு நபர் ஆணையம் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் சில திருத்தங்களை செய்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவோம்" என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை நான் ஒரு வேதாளம், பேயை ஓட்டுவது எனது கடமை என்று கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், "அது வேதாளத்திற்கும் பேய்க்கும் உள்ள விவகாரம் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நாங்கள் மனிதர்கள்" என்றார். அதனைத் தொடர்ந்து பேசியவர், "சமுதாயத்தில் தவறான வார்த்தைகளை எல்லாம் அவர் பயன்படுத்தி பேசியுள்ளார். அதனால் தான் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நான் ஏற்கனவே கூறியிருந்தேன், தேர்தலுக்கு பின்பு அதிமுக ஆபத்தான சூழலை சந்திக்கப் போகிறது என்று. அது தற்போது நடந்து கொண்டுள்ளது. அவரது கொங்கு மண்டலத்தைச் சார்ந்த நிர்வாகிகளே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர். அதே போன்று, டெல்டா மாவட்ட நிர்வாகிகளும் அவருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.