தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செங்கோட்டையன் தி.மு.க-வில் இணைகிறாரா? அமைச்சர் ரகுபதி கூறியது என்ன? - MINISTER REGUPATHY ON SENGOTTAIYAN

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது மனக்குமுறலை கூறியுள்ளார் எனவும், அவர் தி.மு.க-வில் இணையவுள்ளார் என நான் கூறவில்லை எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2025, 7:35 AM IST

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, த.வெ.க விஜய் - பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வியூகங்கள் போன்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ரகுபதி, "வெல்வோம் 200 படைப்போம் வரலாறு, 2026 தேர்தலில் 200 இலக்கு, அதன் தொடக்கமே ஈரோடு கிழக்கு என்று முழக்கமிட்டு வரும் முதலமைச்சர் ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்தின் மூலமாக குடும்பத்தில் ஒருவருக்கு பலன் சென்றடைந்து இருக்கிறது.

பலன் கிடைக்காத குடும்பமே இல்லை என்ற அளவிற்கு உள்ளது. கடந்த முறை செய்தியாளர்களை சந்தித்த போது அதிமுக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இல்லை என்பதை அங்கு (அதிமுக) பேசுபவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம் என கூறினேன்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்தவர்கள் முதல் முறையாக உதயச்சூரியன் சின்னத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறோம். சமீபத்தில் தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பை நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் தி.மு.க கூட்டணி வெல்லும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 47 சதவீதம் வாக்குகள் பெற்ற நிலையில், இம்முறை 52% வாக்குகளை பெறும்.

அதே போல அதிமுக வாக்குகள் 23 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறையும் என கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. எல்லாரும் சேர்ந்து வந்தாலும் தனித்து வந்தாலும், திமுக ஆட்சிக்கு ஆதரவு அலைகள் தான் இருக்கிறது எதிர்ப்பு அலை இல்லை. புதிய கட்சிகள் மற்றும் என்டிஏ கூட்டணிக்கு 21% தான் வருகிறது. எங்களை பொறுத்தவரையில் இன்னும் சதவிகிதத்தை உயர்த்துவதற்கான பணிகளை மேற்கொள்வோம் என கூறினார்.

தமிழ்நாட்டை ஆளக்கூடிய பொறுப்பை முதலமைச்சரிடம் தருவார்கள். வாக்கு வங்கி 47 சதவீதத்திலிருந்து 52 சதவீதமாக அதிகரித்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகளை குறிப்பிட்ட அளவு ஏற்றுக் கொள்ள வேண்டும். கருத்துக்கணிப்புகள் ஒரு பாடம் அதற்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டும். திமுகவுக்கு எதிரிகளை இல்லை என எப்போதும் சொல்வதில்லை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை எதிரிகளே இல்லை என கூறுவார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க-வுக்கு அ.தி.மு.க தான் எதிரி” எனத் தெரிவித்தார்.

அறிவாலயத்தில் உள்ள செங்கல் ஒவ்வொன்றாக எடுக்கப்படும் என அண்ணாமலை கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர், "செங்கல் எடுக்கிற வேலன்னா வேற எங்கேயாவது போய் செங்கல் எடுக்கச் சொல்லுங்கள், அறிவாலயத்தில் உள்ள செங்கலில் அவரால் கை வைத்து கூட பார்க்க முடியாது. ஆட்சியில் இருக்கும் போது அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துவது இயற்கை தான், நாங்கள் தவறு செய்யவில்லை, தவறுக்கு இடம் கொடுக்காமல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்றார்.

அமைச்சர் ரகுபதி பேட்டி (ETV Bharat Tamil Nadu)

செங்கோட்டையன் திமுகவில் இணைய உள்ளாரா என்ற கேள்விக்கு, "அப்படி சொல்லவில்லை, ஆனால் செங்கோட்டையன் அதிருப்தியில் அவரது மனக்குமுறலை சொல்லி இருக்கிறார். நான் திமுகவில் இணையப் போகிறார் என சொல்லவில்லை. ஒரு நண்பர் என்னிடத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது கட்சித் தலைவர் எடப்பாடி, வேலுமணி, தங்கமணி எல்லோரும் எனக்கு ஜூனியர் தான் என சொன்னதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுக கலகலத்துக் கொண்டிருக்கிறது. அது உண்மை தானே” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:விஜயலட்சுமி அளித்த புகார்: சீமான் வழக்கில் 19 ஆம் தேதி தீர்ப்பு - சென்னை ஐகோர்ட் அதிரடி!

பாலியல் குற்றச்சாட்டில் ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, “யார் குற்றம் சாட்டப்பட்டாலும் போதுமான ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், யார் தைரியமாக வந்து சொன்னாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தோழமைக் கட்சிகளை நாங்கள் மதிக்கக் கூடியவர்கள், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரகுமார் பதவி ஏற்கும் போது, கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம், தோழமைக்கு உரிய மரியாதை கொடுத்து வருகிறோம், யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்” என தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு 20 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது என பிரசாத் கிஷோர் கூறியது குறித்தான கேள்விக்கு, “பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வகுப்பாளராக உள்ளார். அதன் காரணத்தினால் அப்படி சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு வாக்கு வங்கி இருப்பதாக தெரியவில்லை. பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கு பணியாற்றிய போது, மக்களின் சக்தி எங்களுடன் இருந்தது அதனால் வெற்றி பெற்றோம். பிரசாந்த் கிஷோர் தவெக பக்கம் சென்றதால், ஒரு மாற்றமும் வராது, ஏமாற்றம் தான் ஏற்படும்” என கூறினார்.

இதனைத்தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசிய அமைச்சர் ரகுபதி, “முடிந்த வரை இந்த ஆண்டுக்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு முதலமைச்சர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு விவகாரம், அவர்கள் எடுத்தால் தான் சரியாக இருக்கும். நாங்கள் சாதிவாறு கணக்கெடுப்பு எடுத்தால் சட்ட வலிமை கிடையாது, பல பிரச்சினைகள் எதிர்கொள்ள வேண்டி வரும். சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரி அல்ல, நாங்கள் எடுப்பது சட்டப்பூர்வமாக செல்லாது என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details