புதுக்கோட்டையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தேர்தல் பிரச்சாரம் புதுக்கோட்டை:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியோடு ஓய்வு பெறுவதை அடுத்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசிய பேச்சு கூட்டணி கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து, அத்தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோயில், அறந்தாங்கி உள்ளிட்ட இடங்களில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் வாரியத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேற்று(செவ்வாய்கிழமை) தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
தொடர்ந்து கரூர் கிராமத்தில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பர், "தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள 40 தொகுதிகளில் திருநெல்வேலி ஒரு தொகுதி மட்டும் தான் கொஞ்சம் டவுட்டாக உள்ளது. ஆனாலும் ஜெயித்து விடுவோம். அத்தொகுதிக்கு இன்று(புதன்கிழமை) பிரச்சாரத்துக்குச் செல்கிறேன். அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸின் அணுகுமுறை கொஞ்சம் பத்தவில்லை. ஆனால் அவர் துணிச்சல் காரர். முன்னதாக அத்தொகுதிக்கு கூட்டத்திற்கு சென்றேன். அப்போது, ஜெயித்து விடுவோம் ஒன்றும் பிரச்சனை இல்லை என வேட்பாளர் தெரிவித்ததாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி ஏன் ஜெயிக்க கூடாது என்று நினைக்கிறோம் என்றால், அவர் அதிபர் ஆட்சியை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப் பார்க்கிறார். அவர் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக முறையில் ஆட்சி நடக்காது. அதனால்தான் ஜனநாயக வழியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று திமுக கூட்டணியினர் நினைக்கின்றோம் எனத் தெரிவித்தார். இந்த நிலையில், பிரச்சாரத்தில் ராஜ கண்ணப்பன் பேசிய பேச்சு அங்கிருந்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியினிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நெல்லை காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு.. கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியதாக தகவல்! - IT Raid In Tirunelveli