தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நில அபகரிப்பு புகாருக்கு மறுப்பு.. அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் தரப்பு நோட்டீஸ் - ARAPPOR IYAKKAM

அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அவரது மகன்கள் சென்னையில் அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு, ராஜகண்ணப்பன் தரப்பு வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அறப்போர் இயக்கம் சின்னம், சரவணன் பதில் அறிக்கை
அறப்போர் இயக்கம் சின்னம், சரவணன் பதில் அறிக்கை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2024, 11:01 PM IST

சென்னை:அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அவரது மகன்கள் சென்னையில் அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு, ராஜகண்ணப்பன் தரப்பு வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது, "அறப்போர் இயக்கம் என்ற பெயரில் தவறான தகவல்களை தெரிவித்து டெக்கான் ஃபன் ஐலேன்டு & ஹோட்டல் லிமிடெட் என்ற நிறுவனம் பெற்ற நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து அறப்போர் இயக்கம் கொடுத்த குற்றச்சாட்டுகளுக்கான நீதிமன்ற ஆணையுடன் கூடிய தனியார் நிறுவனத்தின் பதில் அறிக்கை

கடந்த1991ல் டெக்கான் ஃபன் ஐலேன்டு & ஹோட்டல் லிமிடெட் தன் நிறுவனத்தின் பெயரில் கிரையம் பெற்ற சொத்துக்களை 1992ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் (O.S.No.3714 of 1992) மூலம் இது அரசு நிலம் அல்ல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடம் என்று உறுதி செய்தது.

அதனை எதிர்த்து 1994ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. (864/1994) அந்த தீர்ப்பினை 23 ஆண்டுகள் வழக்கு நடைபெற்று 2017ம் ஆண்டு அந்த வழக்கில் நிறுவனத்திற்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின் அடிப்படையிலும் நீதிமன்ற உத்தரவுபடியும் இந்த நிறுவனம் முறையாக செயல்பட்டு வருகிறது. இது தனியார் நிறுவனம். இந்த நிறுவனத்தில் பல்வேறு தரப்பினர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேலும், இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக உறுப்பினர்களாக, அமைச்சர் தரப்பினர் உறுப்பினர்களாக இருந்தனர் என்பதன் காரணமாக அந்த காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்காக தற்போது அவதூறான செய்தியை பரப்பி நீதிமன்ற ஆணைகளை மறைத்து புறம் பேசி தவறான தகவலை பகிரங்கமாக தெரிவித்ததற்கு நீதிமன்ற நடவடிக்கை எடுக்க இருக்கின்ற சூழலில் இதனுடைய விவரத்தை கீழ்கண்டவாறு தெரிவிக்கிறோம்.

இந்த நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் என்ற முறையில் நிறுவனத்தின் மீது அவதூறு பரப்பிய நபர்கள் மீது எங்கள் நிறுவனத்தின் சார்பாக மானநஷ்ட வழக்கு தொடர்வது மட்டுமின்றி தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் சைதாப்பேட்டை தாலூகா சென்னை 600016 செயின்ட் தாமஸ் மௌண்ட், 12 ஜிஎஸ்டி ரோடு, சர்வே எண்.1553, 4 ஏக்கர் 26 சென்ட்ஸ் பரப்பளவு கொண்ட நிலம் மற்றும் கட்டிடத்தினை எங்கள் நிறுவனமாகிய டெக்கான் ஃபன் ஐலேன்டு & ஹோட்டல் லிமிடெட் முந்தைய நில உரிமைதாரர்களிடமிருந்து கடந்த 1991ல் வாங்கப்பட்டது.

பின்னர் அதன் அடிப்படையில் நில உரிமையை கேனான் குடும்பத்தினர் மேற்படி சொத்தினை கிரையம் வாங்கிய வகையில், மேற்படி நிறுவனம் 35 ஆண்டுகளுக்கு மேலாக கிரைய பத்திரம் சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்டதன் அடிப்படையில் தங்களது உரிமையை நிலைநாட்டியது.

பின்னர் மேற்படி நிறுவனமானது (Deccan Fun Islands &Hotel Limited) செயின்ட் தாமஸ் மௌண்ட் கிராமச் சட்ட விதியின் பிரகாரம் இதனை முதல் தபசில் சேர்க்க வேண்டும் என்றும், பின்னர் அரசு எந்த விதத்திலும் இந்த இடத்தில் நுழையக் கூடாது என்று உறுத்துக்கட்டளை பிறப்பிக்கப்படவேண்டும் என்று பரிகாரம் கேட்டும் மேலும் பட்டா வேண்டியும் வழக்கு அசல் எண், 3714 / 1992 தாக்கல் செய்யப்பட்டு 16.10.1992 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க :நாமக்கல் மாவட்டத்திற்கு முதலமைச்சர் வெளியிட்ட 4 புதிய அறிவிப்புகள்! - முழுவிவரம் இதோ!

அந்த தீர்ப்பில் நிறுவனத்திற்கு சாதகமாக 1912ல் ஜேம்ஸ்ஷாட் அவர்களுக்கு இக்னேஷியஸ் என்பவர் விற்பனை செய்திருப்பதாகவும் அன்றிலிருந்து இன்று வரை வேறு யார்பேரில் இருந்திருக்கிறதோ அதற்கு 100 ஆண்டுகளுக்கு மேலாக வரி கட்டியதுமின்றி மற்றும் சர்வே செட்டில்மெண்ட் நகல் மற்றும் தனியார் நிறுவனத்தின் பெயரில் உள்ள வீட்டினை மாற்றுவதற்காக செயிண்ட் தாமஸ் மௌண்ட் கன்டோவ்மெண்ட் போர்டிலிருந்து 08.07.1991ல் கொடுக்கப்பட்ட உத்தரவு அனைத்தையும் கருத்தில் கொண்டு ஆவணங்களை விளம்புகை பரிகாரத்திற்கு ஏற்றுக்கொண்டு மேலே குறிப்பிட்ட சர்வே எண்.1353 மேற்படி தனியார் நிறுவனத்திற்கு பாத்தியப்பட்டது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 1994ம் ஆண்டு அரசால் தொடரப்பட்ட மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் 04.09.2017 அன்று 23 ஆண்டுகள் விசாரணைக்குப் பின் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வாறு 100 ஆண்டுகளுக்கு மேலாக விற்பனை பத்திரம் பதியப் பெற்றும் பின்னர் 35 ஆண்டுகளுக்கு மேலாக நிறுவனத்தின் சுவாதீனத்திலும் கிரையப் பத்திரம் மூலமாக வாங்கப்பட்டு வரிவகைகள் செய்தும் மின் இணைப்புகள் மற்றும் நிலவரி ஆவணங்களில் சம்பந்தப்பட்ட அனைத்திலும் உரிமையை நிலைநாட்டி வரும் பட்சத்தில் முறையான வகையில் தனியார் நிறுவனத்தின் பங்கு பரிமாற்றம் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நடைபெற்றது. சட்டப்படி செயல்பாடுகள் செய்யப்பட்டன.

இவ்வாறிருக்க தவறான தகவல்களை தெரிவித்து 100 ஆண்டுகளுக்கு மேலாக மேற்படி நிலத்திற்கு (சர்வே எண்.1353) கிரையப்பதிவுகள் ஏற்பட்டு, பின்னர் 35 ஆண்டுகளுக்கு முன்பாக கிரையம் பெற்ற ஒரு தனிப்பட்ட சொத்தின் மீது வேண்டுமென்றே தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் 2015ம் ஆண்டு போடப்பட்ட ஆணை எதுவும் அதற்கு முந்தைய கிரையப் பத்திரத்தை கட்டுப்படுத்தாது அந்த ஆணை 1912ல் நடைபெற்ற கிரையப் பத்திரத்தை கட்டுப்படுத்தாது. எந்த ஆணையும் பேரில் பிறப்பித்த பின்பு நடைபெறும் பதிவுகளுக்கு பொருந்தும். பின்நோக்கிச் செல்லாது.

எனவே இவ்வாறு தவறான தகவல்களை தெரிவித்து என்னுடைய நிறுவனத்தின் மீது அவதூறு பரப்பிய நபர்கள் மீது எங்கள் நிறுவனத்தின் சார்பாக மானநஷ்ட வழக்கு தொடர்வது மட்டுமின்றி தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details