புதுக்கோட்டை:புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பகல் கனவு காண்பவர் எடப்பாடி பழனிசாமி: கூட்டத்தில் துணை முதலமைச்சர் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “எடப்பாடி பழனிச்சாமி எப்போதும் பகல் கனவு கண்டு கொண்டிருப்பவர்.
தனி மரம் தோப்பாகாது:அவருடன் கூட்டணி போவதற்கு யாரும் தயாராக இல்லை. தேமுதிக மட்டும் தான் அவர்களுடன் உள்ளது. அவர்களும் கலண்டுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தனி மரம் தோப்பாகாது எடப்பாடி பழனிச்சாமி கனவு பலிக்காது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயர் செயல்படுத்தக்கூடிய திட்டங்களும் மக்களுக்கான திட்டங்கள்தான், உதாரணத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் போன்றவைகள் மக்களுக்கான திட்டங்கள்.
நெஞ்சை நிமிர்த்தி சொல்லவோம்:இந்த அரசு செய்ததைப் போல இதுவரை எந்த அரசும் இந்தியாவிலே செய்ததில்லை இதை எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். எடப்பாடி பழனிச்சாமி ஏதாவது திட்டங்களை அவரால் சொல்ல முடியுமா? எந்த வகையிலும் 2026 களம் மாறாது களம் எங்களது கூட்டணி எங்களது இந்தியா கூட்டணி வெல்லும்.
இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின்:கூட்டணி ஆட்சி அமையும் என்று அன்புமணி ராமதாஸ் பகல் கனவு கண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நிச்சயம் எங்களது கூட்டணி வென்று எங்களது ஆட்சி தான் அமையும். மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று புதிய வரலாற்றை படைப்பார். கூட்டணியை பிரிப்பதற்கு யார் எந்த சதி வேலைகளை செய்தாலும் எங்களுடன் இருப்பவர்கள் நட்போடும், பாசத்தோடும் இருப்பவர்கள். எந்த சதி வேலைகளிலும் சிக்க மாட்டார்கள்.