புதுக்கோட்டை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டை அடித்துக்கொண்டு நடத்திய போராட்டம் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், '' சாட்டையால் அடித்துக்கொள்வது ஒருவருக்கு கொடுக்கக்கூடிய தண்டனை அல்லது பாவ விமோசனம்'' என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது; '' சாட்டையால் அடித்துக்கொள்வது என்பது ஒருவருக்கு கொடுக்கக்கூடிய தண்டனை அல்லது பாவ விமோசனம். எனவே, அண்ணாமலை செய்த தவறின் அடிப்படையில் பாவ விமோசனத்திற்காக சாட்டை அடித்துக் கொண்டாரா, அல்லது செய்த தவறுக்காக தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டாரா? என்பதுதான் கேள்வியே தவிர, திமுக அரசு அவருக்கு எந்த பாதகமும் செய்யவில்லை.
பாரதிய ஜனதா கட்சியில் பழனி பாத யாத்திரை செல்வதற்காக 40 நாள் செருப்பு போடாமல் இருப்பார்கள். அதை அண்ணாமலை கடைப்பிடித்து வருகிறார். ஆனால், திமுகவை அகற்றுவேன் என்று கூறினால், அவர் வாழ்நாள் முழுவதும் செருப்பு அணிய முடியாது.
ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் தொடர்பு இல்லை
ஞானசேகரனுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டோம். ஞானசேகரனுக்கும் எங்களது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி ஒயர்கள் இருக்கா இல்லையா என்பது விசாரணையில் தெரிய வரும். அவர் எந்த வழியாக வந்தார் என்பது விசாரணையில் கண்டுபிடித்து விடுவோம். அப்போது 'நிர்பயா நிதி' எப்படி செலவு செய்யப்பட்டது என்பது தெரிய வரும்.
இதையும் படிங்க:"லண்டனில் இருந்து திரும்பியபின் என் பாதை தெளிவாக இருக்கின்றது"- அண்ணாமலை பேட்டி!
பொதுவாக எஃப்ஐஆர் காப்பி புகார் கொடுத்தவர்களிடம் ஒரு நகல் வழங்கப்படும். அவர்கள் மூலமாகவோ கூட எஃப்ஐஆர் காப்பி வெளி வந்திருக்கலாம். எஃப்ஐஆர் காப்பியில் தரம் தாழ்ந்த வார்த்தைகள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவ்வாறு காவல்துறையினர் எழுத மாட்டார்கள். அண்ணா பல்கலைக்கழக வளாகம் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மிகப்பெரிய பகுதி அது. கைதான ஞானசேகரன் இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக வந்துள்ளார். இனிமேல் பாதுகாப்பை எவ்வாறு அதிகரிக்க வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்.