புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை பணிகளையும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை, பெரியார் நகர் மற்றும் பால் பண்ணை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சர் ரகுபதி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் ஆகியோரிடம் முன்னெச்சரிக்கை என்னென்ன எடுக்கப்பட்டுள்ளது, என்னென்ன முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.
ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ரகுபதி (Credits - ETV Bharat Tamil Nadu) மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்து அதன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி வருகிறோம்.
இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. அவ்வாறு இருந்தால் எங்களிடம் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். புதுக்கோட்டையில் கடந்த காலங்களில் ஒரு நாள் மட்டும் 43 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த முறை புதுக்கோட்டையில் ஒரு மணி நேரத்திலேயே 43 மில்லி மீட்டர் மழை பெய்ததால் தான் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணிகளும் முடிவடைந்து வெள்ளநீர் அகற்றப்பட்டுவிட்டது.
இதையும் படிங்க:"ஒரே நாளில் 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு..பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்" - துணை முதல்வர் உதயநிதி!
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து உள்ள நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் மக்கள் பாதித்தால் அவர்கள் தங்க வைப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் வெள்ள நீரால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு பல்வேறு தூர்வாரும் பணிகளும், வரத்து வாய்க்கால்கள் சரி செய்யும் பணியிலும் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநரிடம் மோதல் போக்கு வேண்டாம் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளது குறித்து பதில் அளித்த ரகுபதி, “முதலமைச்சர் உயர் கல்வித் துறை அமைச்சரிடம் வேண்டுமானால் அவ்வாறு சொல்லி இருக்கலாம். அதைப்பற்றி எனக்கு தெரியாது. திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கும். அதனை சட்டம் போட்டு தடுக்குகின்ற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக இருந்தாலும், கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும். சிறை கைதிகள் மன உளைச்சல் ஏற்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக அவர்கள் மன நலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நூலகங்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் கடுமையான மன உளைச்சல் காரணமாக ஒரு சிலர் சிறையிலேயே தற்கொலை முயற்சி மேற்கொள்கின்றனர். தற்கொலையும் செய்து கொள்கின்றனர். இதனைத் தடுப்பதற்கு அரசு இனிவரும் காலங்களில் பல்வேறு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்” என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்