சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று கீழ் பென்னாத்தூர் தொகுதி கடம்பை பகுதியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க அரசு ஆவன செய்யுமா? என்று கீழ் பென்னாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ''கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் 50 ஏக்கர் அரசு நிலத்தில் தற்போது எல்காட் பூங்கா அமைக்கும் பணி திட்டத்தில் இல்லை. ஓசூரில் உள்ள எல்காட் அதிக பணிகள் நடைபெற்று வருகின்றன'' என்றார்.
மேலும், கீழ்பெண்ணாத்தூரில் இருந்து சென்னையும், ஓசுரும் அருகில் இருப்பதாக சொன்னார்கள், அங்கெல்லாம் இடம் கிடைக்காது.. இங்கு அரசு புறம்போக்கு இடம் 100 ஏக்கருக்கு மேல் உள்ளது, இங்கு கட்டினால் உதவியாக இருக்கும் என்பதற்கு பதிலளித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ''நிலம் கிடைப்பது கடினமானது தான் உண்மைதான். குறுகிய காலத்தில் வேலை உருவாக்கப்படும் ஆனால், நிதி ஒதுக்கீடுகள் ஏற்ப தான் பணி செய்ய முடியும். இந்த நிதியாண்டு 119 கோடி தான் தகவல் தொழில் நுட்ப துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு நூறு கோடி ஒதுக்கப்படும் பொழுது ஓர் அளவுக்கு தான் செயல்படுத்த முடியும். நிதி குறைவாக இருந்தும் சிறப்பாக செயலாற்றி வருகிறோம் அதற்கு நம் தமிழகத்தில் சிறப்பான ஐ.டி துறை சிறந்த வல்லுனர்கள் இருப்பது தான் காரணம்'' என்றார்.
தொடர்ந்து, சாப்ட்வேர் ஏற்றுமதியில் இந்தியாவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது. எவ்வளவு மதிப்புள்ள சாப்வேர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்று சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி கேட்க, அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், ''இப்போது தெரிகிறதா? நீங்கள் நிதி துறையில் இருக்கும் போது இப்படி தான் நிதி ஒதுக்கினீர்கள்'' என்றார்.
அமைச்சர் துரைமுருகனைத் தொடர்ந்து பேசிய பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ''அன்று நான் நிதித்துறை அமைச்சராக இருந்த போதும் இந்த துறைக்கு இவ்வளவு தான் நிதி ஒதுக்கினோம். அரசு நான் நிதி அமைச்சராக இருக்கும் போது, அதிகமாக நிதி ஒதுக்கியதாகவும், இப்போது குறைவு என்று சொல்லவில்லை. செயல்முறையை மாற்றினால் தான் நோக்கத்தை அடைய முடியும். நிதி மூன்றாவது பட்சம் தான். என்னை பொறுத்தவரை முதலமைச்சரின் ஆதரவும், ஊக்கமும் இருந்தால் அதை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம்'' என கூறினார்.