சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி திமுக எம்.பி. கவுதம சிகாமணி சென்னை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
கடந்த 2006-2011ஆம் விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி, கே.எஸ்.ராஜ மகேந்திரன், வி.ஜெயச்சந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ்.பிசினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகிய 6 பேருக்கு எதிராகச் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.