விழுப்புரம்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது, இந்த நிலையில் தேர்தல் கள பிரச்சாரங்கள் சூடுபிடித்துக் காணப்படுகிறது. இந்த நிலையில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து.ரவிக்குமாரை ஆதரித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரங்கியூர், ஏனாதிமங்கலம், சிறுவானூர், சிறுமதுரை, ஏம்ப்பூர், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகர், சின்னசெவலை, டி.எடையார் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அவரது சொந்த ஊரான டி.எடையார் பகுதியில் கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்துப் பேசிய அமைச்சர் பொன்முடி, "ஒரு காலத்தில் பெண்கள் படிக்க நினைத்தாலும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். ஆனால் இன்று நீங்கள் படிக்காவிட்டாலும் உங்கள் குழந்தைகளைப் படிக்க வேண்டும் என கண்டித்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கு காரணம் திராவிடம்.
ஏனெனில் பெண்கள் படிக்க வேண்டும் என்பதைத்தான் பெரியாரும், அண்ணாவும் திரும்பத் திரும்ப இந்த சமூகத்திற்குக் கூறினார்கள். சமூகத்தில் வாழும் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதே திராவிடம். பெண்கள் பள்ளிக்குச் செல்வதும், அனைத்து மக்களும் கோயிலுக்குள் நுழைவதும் தான் திராவிடம். ஆனால் எல்லோரும் சமம் என்பதை ஏற்காத பாஜகவோடு பாமக கூட்டணி அமைத்துள்ளது.