விழுப்புரம்:தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி, தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில், இந்தியா கூட்டணியின் கட்சியின் சார்பில் விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் போட்டியிடவுள்ளார். இவர்கள் இருவரையும் ஆதரித்து, விழுப்புரம் வி.சாலையில் ஏப்.5ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரையாற்றவுள்ளார்.
இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாளைய தினம் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியா கூட்டணியின் கட்சியின் சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
விழுப்புரம் நான்கு முனை சிக்னல் அருகே, நாளை காலை 11 மணியளவில் இந்த பிரச்சாரமானது நடைபெறவுள்ளது. மேலும், விழுப்புரம் மற்றும் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க, விழுப்புரம் வரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது" என்றார்.