விழுப்புரம்: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், திருவெண்ணெய்நல்லூர், காணை மற்றும் விக்கிரவாண்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 998 பயனாளிகளுக்கு ரூ.35.31 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான ஆணையை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது, “குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டினை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், திருவெண்ணெய்நல்லூரில் 249 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 81 லட்சத்து 21 ஆயிரத்து 100 மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், காணை ஒன்றியம், கெடார் ஊராட்சியில் 393 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 90 லட்சத்து 82 ஆயிரத்து 700 மதிப்பீட்டிலும் மற்றும் விக்கிரவாண்டி ஒன்றியம் பனையபுரம் ஊராட்சியில், 356 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 59 லட்சத்து 88 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் என மொத்தம் 998 பயனாளிகளுக்கு ரூ.35 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 200 மதிப்பீட்டில், கழிப்பறையுடன் கூடிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.