சென்னை:2024 - 2025ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் 4வது முறையாக இன்று (பிப்.19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில், விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறைக்கு ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையை விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை என்று பெயர் மாற்றம் செய்து, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அவர், வெளியிட்டுள்ள அறிவிப்புகள் பின்வருமாறு.
விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு வளாகம்: விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறையினால், கரூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த, விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு வளாகம் அமைத்தல்.
விதை மரபணு ஆய்வகம்: விதை மரபணு தூய்மையை உறுதி செய்வதற்கு, தானியங்கி மூன்றாம் தலைமுறை டிஎன்ஏ மார்க்கர் தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆய்வகம் கோயம்புத்தூரில் அமைத்தல்.
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: தமிழ்நாட்டில் உயிர்மச் சான்றளிப்பை ஊக்குவிக்கும் வகையில், தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில், பதிவு உயிர்ம நிலையை அடைந்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல்.
NABL தரச்சான்றிதழ்: தருமபுரி, காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி ஆசிய ஆறு விதைப் பரிசோதனை நிலையங்களுக்கு, NABL (National Accreditation Boud for Testing and Calibration Laboratories) தரச்சான்று வழங்குதல்.
மானியம்: உயிர்ம விளைபொருட்களில் இருக்கும் நச்சுப் பொருட்களின் தன்மையினை அறிந்து ஏற்றுமதி செய்யவும், எஞ்சிய மதிப்பீடு பரிசோதனை செய்வதற்கான கட்டணத்திற்கு முழு மானியம் வழங்குதல் உள்ளிட்டவைகளுக்கு, 2024 - 2025 ஆம் ஆண்டில் ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
புதிய பதிவு முறை:மேலும்,முன்னணி விதை நிறுவனங்களின் விதைகள் மாற்றுப் பெயரில் சந்தையில் வராமல் இருப்பதை கண்காணித்து, விவசாயிகளுக்குத் தரமான விதைகளை அளிக்க புதிய பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும்.
விதைச்சட்டம்: தனியார் நாற்றங்கால்களில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள், அவற்றின் தரம், நாற்றின் விதைகள் மற்றும் நாற்று பெறப்பட்ட இடம் ஆகியவை விதைச்சட்டத்தின்படி உறுதி செய்யப்படும். மேலும், விதைச்சட்டங்களின் மூலமாக, விவசாயிகளுக்கு அதிக விளைச்சலைத் தரும், தரமான வீரிய ஒட்டு மக்காச்சோள விதைகள் கிடைக்கும் வகையில், சான்றளிப்பு, விதை ஆய்வு, விதைப்பரிசோதனை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதையும் படிங்க:"முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்" வேளாண் பட்ஜெட்டில் புதிதாக அறிமுகம்