தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படாது” அமைச்சர் அளித்த உறுதி; கைவிடப்பட்ட மேலூர் போராட்டம்! - ARITTAPATTI TUNGSTEN MINING

மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் மக்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

போரட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் மூர்த்தி
போரட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் மூர்த்தி (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2024, 4:45 PM IST

மதுரை:மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு (Hindustan Zinc Limited) டங்ஸ்டன் சுரங்க (Tungsten mining) அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து மத்திய அரசின் கனிம வளத்துறை சார்பில் மதுரை மாவட்டம் மேலூரை ஒட்டியுள்ள ஐந்தாயிரம் ஏக்கர் நிலத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இந்த டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மேலூர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் மூர்த்தி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதில், பல்வேறு விவசாய சங்கத்தினர், வணிக சங்கத்தினர், வழக்கறிஞர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், மற்றும் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராகவும், டங்ஸ்டன் எடுக்க மத்திய அரசு வழங்கிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டியும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:டங்ஸ்டன் கனிம சுரங்கத்துக்கு எதிர்ப்பு: 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றம்!

இது குறித்து பேசிய போராட்டகாரர்கள், “தமிழக அரசு டங்ஸ்டன் எடுக்க அனுமதி வழங்க கூடாது. இதுகுறித்து சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி கொள்கை முடிவு எடுக்க வேண்டும். முல்லை பெரியாறு ஒருபோக பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக, பல்வேறு வரலாற்று மற்றும் தொல்லியல் சின்னங்கள் உள்ள மதுரை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட தமிழ் பண்பாட்டு தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள வணிகர்களோடு தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது பேசிய அமைச்சர் மூர்த்தி, “தமிழகத்தை பாதிக்கின்ற எந்த ஒரு திட்டத்திற்கும், தமிழக அரசு அனுமதி வழங்காது. டங்ஸ்டன் எடுக்க மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதையும் படிங்க:டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்யுங்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

டங்ஸ்டன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாவட்டத்தில் டங்ஸ்டன் எடுக்கவோ, மக்களை பாதிக்கின்ற எந்த ஒரு ஆய்வுக்கும் தமிழக அரசு அனுமதி கொடுக்காது.

மாவட்டத்தில் டங்ஸ்டன் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்காது. இது குறித்த சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு தீர்மானம் கொண்டுவரப்படும். மக்களுக்கு என்றும் தமிழக அரசு துணை நிற்கும் என்று தெரிவித்ததுடன். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு கடைகளை உடனடியாக திறக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத்தொடர்ந்து, பேசிய மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், “இது குறித்து கட்சி பாகுபாடின்றி தமிழக அரசு சிறப்பு கூட்டத்தை கூட்டி, தீர்மானம் கொண்டுவர வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து, விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details