சென்னை:2024-25ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் சேகரிப்பு உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள், பாரம்பரிய கால்நடை மூலிகை மருத்துவ பயிற்சி பெற்ற களப் பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை நந்தனம் ஆவின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “இந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 4 அறிவிப்புகளை இன்று முதல் செயலாக்கத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
ரூ.1 கோடி செலவில் விவசாய மக்களுக்கு பசுந்தீவன புல் கரணங்கள் வழங்குதல் மற்றும் புதிதாக சங்கங்கள் துவங்கிய கிராமங்களில் தேவைப்படும் உபகரணங்கள் வாங்க 1.25 லட்சம் ரூபாய் நிதியும், விவசாய கால்நடைகளுக்கு மற்றும் மாடுகளுக்கு வரும் சிறிய நோய்களை மூலிகை மருந்துகளால் குணப்படுத்த 3,000 பேருக்கு மருத்துவப் பயிற்சி நடத்தி சான்றிதழ் வழங்கி உள்ளோம்.
மேலும், குறைந்த விலையில் 20 முதல் 25 சதவீதம் மானியத்தில் சில மருந்துகளை விவசாய மக்களுக்கு கூட்டுறவு சங்கம் வாயிலாக பரிசோதனைக் கருவிகளை வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளோம். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார். மேலும், பால் உற்பத்தி மற்றும் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, “35 முதல் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறோம். தற்போது போதுமான அளவிற்கு பால் கிடைக்கிறது. கடந்த ஆண்டு தான் 26 லட்சம் அளவிற்கு பால் உற்பத்தி குறைந்தது” என்றார்.