சென்னை: மருந்துகள் பெயரை மாற்றி, அவை கையிருப்பில் இல்லை என்று கூறி மக்களை பதற்றமாக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா என்று சுகாதாரத்து றை அமைச்சர் மா. சுப்ரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்துள்ள பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது; ''கள்ளக்குறிச்சி சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர், மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்தபின், கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதன் பின்னர் ''தமிழ்நாடு அரசு இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவர்களை நியமித்து மிகச் சிறப்பாக மருத்துவ சேவையினை அளித்துக் கொண்டிருக்கிறது'' என்று தெரிவிதுள்ளார்.
தமிழ்நாடு அரசு தொடக்க நாள் முதலே சிகிச்சைகள் அளிப்பதில் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேவையில்லாமல் மருத்துவமனையை பார்த்துவிட்டு, ஒரு சில மருந்துகளை சொல்லி Omeprazole மருந்து கையிருப்பில் இல்லை என்று சொன்னார்.
நான் உடனடியாக ''Omeprazole மருந்து 4.42 கோடி கையிருப்பில் உள்ளது அது அல்சர் போன்ற வியாதிகளுக்கு தொடக்கத்தில் தரப்படும் மருந்தாகும். அந்த மருந்து இருப்பு குறித்து தகவல்கள் இணையதளத்தில் உள்ளது'' என்றேன். உடனடியாக அடுத்த நாள் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் சபாநாயகர் பேசும் வாய்ப்பு அளித்தும், சட்டமன்றத்தை புறக்கணித்து விட்டு, சட்டமன்ற மரபுகளுக்கு சவால் விடும் வகையில் வெளியில் சென்று பேட்டியளித்துள்ளார்.
அதில் ''தான் கூறியது Omeprazole இல்லை Fomepizole'' என்று கூறி, அந்த மருந்து கையிருப்பில் இல்லை என்று கூறினார். நான் அந்த மருந்தும் கையிருப்பில் உள்ளது என்று கூறினேன்.