தஞ்சாவூர்: மூன்றாவது சர்வதேச பொது சுகாதார மாநாடு DPHICON 2024 நேற்று (அக்.3) தஞ்சாவூரில் நடைபெற்றது. இம்மாநாட்டினை முன்னிட்டு பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்ற பேரணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மேலும், தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதாவது, “கடந்த ஆண்டை விட பிரசவத்தின் போது ஏற்படும் இறப்பு விகிதம் தற்போது 9 சதவீதம் குறைந்துள்ளது. மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக விருதுநகர் அறிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒரே ஊசியைப் பயன்படுத்திய பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது அனைவருக்குமான பாடமாக அமையும். தமிழகத்தில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவில் மருந்துகள் உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கிடங்குகள் உள்ளது.