சென்னை: எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்ப நல மையத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் 2024 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, உலக எய்ட்ஸ் தினம் 2024 உறுதிமொழியை வாசிக்க அங்கிருந்தவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "சென்னையில் கனமழை இருந்ததால் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சி அன்று நடைபெறாமல் இன்று (டிச.05) சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தின கருப்பொருளாக "Take The Right Path: My Health My Right", அதாவது, "எனது ஆரோக்கியம் எனது உரிமையே சரியான வழி" என்பதாகும். ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட உரிமைகளை அங்கீகரிப்பதன் மூலமே, எச்.ஐ.வி, எய்ட்ஸை முழு அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதே அதன் பொருளாகும்.
எய்ட்ஸ் பாதிப்பை பொறுத்தவரை இந்தியாவில் 0.23 சதவீதமாக உள்ளது தமிழ்நாட்டில் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாகவும், விழிப்புணர்வு தொடர்ந்து மேற்கொண்டதாலும் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் 0.16 சதவீதமாக உள்ளது. இதை பூஜ்யம் நிலைக்கு கொண்டு செல்ல அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எய்ட்ஸ் தொற்றை கண்டறிய 3,161 நம்பிக்கை மையங்கள் உள்ளது, எயிட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்கு 74 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் உள்ளது. இதற்கு இணை கூட்டு சிகிச்சை மையம் என்ற வகையில் 173 இடங்களில் உள்ளது.