திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.18 கோடியே 30 லட்சம் மதிப்பில் அதி நவீன அறுவை சிகிச்சை மையத்தை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி 500 படுக்கைகள் கூடுதலாக இணைத்து, மொத்தம் 870 படுக்கை வசதியுடன் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி, இந்த மருத்துவமனையில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக புறநோயாளிகளின் வருகை 1,000 ஆக இருந்தது. தற்போது புறநோயளிகள் எண்ணிக்கை 2,500 ஆக உயர்ந்துள்ளது. தினந்தோறும் உள் நோயாளிகள் எண்ணிக்கை 500 முதல் 600 ஆக இருந்து வருகிறது. மகப்பேறு பொறுத்தவரை, மாதம் 750 முதல் 800 வரை நடைபெற்று வருகிறது. தினந்தோறும் பிரசவம் 25 முதல் 30 வரை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது, மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வருகிறது. அரசு மருத்துவமனையில் ஏறத்தாழ ரூ.17.77 கோடி மதிப்பில் அதிநவீன 8 புதிய அறுவை சிகிச்சை அரங்கங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.