சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூலை 31) ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ.358 கோடியே 87 லட்சம் செலவில் ஆறு தளங்களுடன் 12 அறுவை சிகிச்சை அரங்கங்களும் ஆசியாவிலேயே புதிய தொழில்நுட்பங்களுடன்கூடிய அரங்கம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த கட்டிடத்தில் 441 படுக்கை வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
அதேபோல, இன்றைய தினம் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலை எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று (ஜூலை 31) காலை 10 மணி முதலாக ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையில் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இளநிலை மருத்துவ படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான, அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்குரிய முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்க உள்ளது. முதற்கட்ட கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 7.5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு தொடர்பான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும்.