சென்னை:சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் மாணவி ர.மா.தமிழினி. இவரது தந்தை ராமசாமி மாதவன் மற்றும் தாய் ரஞ்சிதா. ராமசாமி மாதவன் அமைச்சரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். தமிழினி பேச தொடங்கிய காலத்தில் இருந்தே தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ் எழுத்துக்களை கற்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி தமிழினி தமிழ் மொழியில் உள்ள 247 தமிழ் எழுத்துக்களையும் ஒரு நிமிடம் 14 வினாடிகளில் பாடலாக பாடி ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இடம் பிடித்துள்ளார். 6 வயதில் தமிழ் மொழியில் உள்ள 247 தமிழ் எழுத்துக்களையும் ஒரு நிமிடம் 14 வினாடிகளில் பாடலாக பாடி முதல் சிறுமியாக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை போற்றும் வகையில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் அவருக்கு ஓர் சான்றிதழ், மெடல், ஒரு பேனா மற்றும் பேட்ச் ஆகியவை வழங்கியுள்ளது.