சென்னை : சென்னை ராமாபுரத்தில் வாக்காளர்கள் அடையாள அட்டை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரவாயல் எம்.எல்.ஏ கணபதி மற்றும் கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அரசுப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் அடையாள அட்டை புதுப்பித்தல் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். வாக்காளர் அட்டை முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர், "வாக்காளர் அடையாள அட்டை முகாம் இன்று ராமாபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் முகவரி மாற்றுபவர்கள் உள்ளிட்ட அனைத்து வித மாற்றங்களையும் செய்து கொள்ள முடியும்.
அதே சமயம் இறந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இறப்புச் சான்றிதழை சமர்ப்பித்து நீக்கிக் கொள்ள முடியும். இந்த முகாமை மக்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் எலி மருந்து கசிந்து இரு குழந்தைகள் பலி தொடர்பான கேள்விக்கு, எலி மருந்து விவகாரம் தொடர்பாக அலுவலர்களிடம் இருந்து தகவல் வந்தவுடன் நடவடிக்கை பாயும். இனிமேல் எந்தெந்த மருந்துகளை விற்கக் கூடாது எந்தெந்த மருந்துகளை விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் மருந்துக் கட்டுப்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.