சென்னை: கிண்டியில் உள்ள அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜியை நேற்று (நவ.13) இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கினார். இந்த தாக்குதலில் காயமடைந்த மருத்துவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சங்கம் சார்பில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவ தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று கிண்டி மருத்துவமனைக்கு விரைந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்துள்ளார்.
இந்நிலையில், இன்று (நவ.14) கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சைக்கு பிறகு நலமாக இருக்கிறார். இன்று பிற்பகலுக்கு மேல் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்படவுள்ளார்.
7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு:அவரை தாக்கிய விக்னேஷ் மீது, 126/2 அத்துமீறி நுழைதல், 115/2 காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுதல், 118/1 ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், 121/2 பணியிலிருக்கும் பொது ஊழியருக்கு காயம் ஏற்படுத்துதல், 109 கொலை முயற்சியில் ஈடுபடுதல், 151/3 உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காயத்தை ஏற்படுத்தி மிரட்டுதல் மற்றும் தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட 48 கீழ் 2008 அதன்படி அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது விக்னேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். அவருக்கு 15 நாள்கள் நீதிமன்ற கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.
பார்வையாளர்களுக்கு டேக்: அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு நோயாளியுடன் வருகின்ற பார்வையாளருக்கு அடையாள அட்டை அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, பார்வையாளர்களுக்கு 4 நிறங்களில் கைகளில் கட்டக்கூடிய டேக் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.