திருச்சி: திருச்சி மாநகர் பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையம் முக்கிய பேருந்து நிலையமாக இருந்து வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து நெரிசல், மாநகர பகுதி விரிவாக்கம் உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி, திருச்சியின் புறநகர் பகுதியான பஞ்சப்பூர் பகுதியில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது.
மேலும், புதிதாகக் கட்டப்படும் இந்த பேருந்து நிலையத்தில், வாகன முனையம், சாலைகள், மழைநீர் வடிக்கால், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன், சுமார் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தைத் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் இன்று (திங்கட்கிழமை) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.