நீலகிரி: குன்னூர் அருகே உள்ள சோலடாமட்டம் கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில், அப்பகுதியில் பல இடங்களில் மின்னழுத்தம் குறைவாக இருந்ததால் கணினி, மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற பொருட்கள் சரியான முறையில் இயங்காததால் சிரமம் அடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர்.
மேலும், இது குறித்து மின்சாரத் துறையிடம் தங்கள் பகுதிக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டி கோரிக்கை மனுவும் அளித்திருந்தனர். இந்த நிலையில், தற்போது சோலடாமட்டம் கிராமத்திற்கு மின் குறைபாட்டை போக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக 8 லட்சம் ரூபாய் செலவில், 63 கிலோவாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை (Transformer) சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் குன்னூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுனிதா நேரு, மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் ஜான்சன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இவ்விழாவில் பேசிய அமைச்சர் கா.ராமச்சந்திரன், “தமிழக முதலமைச்சர் இந்த அரசுக்கு திராவிட மாடல் என பெயர் சூட்டியுள்ளார்.
விடியல் பயணம் திட்டத்தின் கீழ் தனது முயற்சியால் நீலகிரி மாவட்டத்தில் 119 பேருந்துகள், 35 கிலோமீட்டர் தூரம் வரை பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் மூலம், இப்பகுதியில் உள்ள 350க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்னழுத்தம் இல்லாமல் தரமான மின்சாரம் கிடைக்கும். மேலும், இதன் மூலம் பொதுமக்கள் பயன் பெறுவார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:“ஸ்டாலினும், உதயநிதியும் பதவி விலக வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி காட்டமாக வலியுறுத்தல்!