சென்னை: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்களை கேரளா மாநிலம் கொச்சின் விமான நிலையத்திற்கு இன்று காலை கொண்டுவரப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை பெறுவதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னையிலிருந்து விமானம் கொச்சி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து கொச்சின் சென்று உடல்களை பெற்றுக்கொண்டு, அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள இருக்கின்றனர்.
கொச்சின் செல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், "கடந்த 2 நாட்களுக்கு முன்பு குவைத் நாட்டில், மாங்காப் என்ற இடத்தில் உள்ள 4 மாடிக் கட்டடத்தில், இந்தியர்கள் உட்பட 195 நபர்கள் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில், திடீரென அந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 நபர்கள் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தீ விபத்தில் காயமடைந்த தமிழர்களுக்கு தேவையான உதவிகளும், உயிரிழந்த நபர்களின் உடல்களை தாயகம் கொண்டு வரும் பணிகளையும் அயலாக்கத் தமிழர் நலத்துறை சார்பில் நடவடிக்கை எடுத்து வரப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சர் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி, ஆறுதல் கூறியுள்ளார். இந்நிலையில் உயிரிழந்த தமிழர்களின் உடல் கேரளா மாநிலம் கொச்சிக்கு இன்று கொண்டு வரப்பட உள்ளது. அங்கிருந்து தமிழ்நாடு அயலாக்கத் தமிழர் நலத்துறை சார்பில் அவர்களின் உடலைப் பெற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு 7 வாகனங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதற்காக நானும் அயலாக்கத் தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தியும் கொச்சி புறப்பட்டு செல்கிறோம்.