வேலூர்: சித்தூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (ஆக.30) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய துரைமுருகன், "பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்திலும் மேம்பாலம் கட்டப்படவில்லை.
ஆனால், நான் சட்டமன்ற உறுப்பினராக வந்த போது 1973ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட 75ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாலம் இடிந்துவிட்ட காரணத்தினால், தற்போது மீண்டும் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் நூறு ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும். இந்த பாலத்தினால், என்னை பிடிக்காதவர்கள்கூட நூறு ஆண்டுகளுக்கும் என் பெயரைச் சொல்வார்கள். மேலும், காட்பாடியில் இருந்து சித்தூர் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், "நான் என்னுடைய தொகுதியை கோயிலாக நினைத்து பணியாற்றி வருகிறேன். காட்பாடி தொகுதி தான் எனக்கு கோயில். என்னை வளர்த்தவர்கள் நீங்கள், என் உயிர் உள்ளவரை நான் உங்களுக்கு அடிமையாக இருந்து, சாகும் வரையில் நன்றியுள்ளவனாக இருப்பேன். என் உயிர் பிரியும்போது காட்பாடி என்று எனது தொகுதியின் பெயரை சொல்லிக் கொண்டே தான் உயிர் பிரியும்" என்று உருக்கமாக பேசினார்.