வேலூர் :ஆளுநர் மாளிகை சத் பூஜை திருநாளுக்கு இந்தியில் வாழ்த்து தெரிவித்திருந்தது குறித்து கேட்டதற்கு, அவர் தான் யார் என்பதை இதன் மூலம் நிருபித்துக் கொண்டிருக்கிறார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், வள்ளி மலையில் இன்று( நவ 7) மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சுமார் 798 நபர்களுக்கு மொத்தம் பத்து கோடியே 91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "கடந்த காலங்களில் மக்கள் அதிகாரிகளை சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி வந்தனர். ஆனால் தற்போது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், மக்களை தேடி அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று, மக்களிடம் மனுக்களை பெற்று நல திட்ட உதவிகளை அளித்து வருகின்றனர்.
மேலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பாலாற்றின் குறுக்கே 10 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேர்க்காடு பகுதியில் பல்நோக்கு அரசு மருத்துவமனை விரைவில் திறக்கப்படும். படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வள்ளிமலை அருகே சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்கு இந்த நிதி ஆண்டில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறும்.
காட்பாடி ரயில் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மேலும் ஒரு மேம்பாலம் கூடுதலாக அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும். காட்பாடி தொகுதியில் கூடுதலான பள்ளி கட்டடங்கள் தேவை என்று தெரிவித்தால் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.