சென்னை:மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால் பணி நீக்கம் செய்யப்படுவது மட்டுமல்லாமல் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வைர விழா இன்று காலை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பின், அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பரிசுகளை வழங்கினார். மேலும் அரசு பள்ளியின் 60ஆம் ஆண்டு மலரை வெளியிட்டு முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “மத்திய அரசு தமிழ்நாட்டில் கல்வி முறை சிறப்பாக இருப்பதாக புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிவிக்கிறது. ஆனால், வழங்க வேண்டிய நிதியை மட்டும் வழங்க மறுக்கிறது. நடைமுறையில் இருக்கும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கூட முறையான நிதியை வழங்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 'மாணவர்கள் மனசு' என்னும் பெட்டி வைத்துள்ளோம். ஆனால், மாணவர்கள் அதிலும் தங்களுக்கு ஏற்படும் பய உணர்வுகள், அவர்களுக்கு நடக்கும் சில சம்பவங்களை வெளியில் சொல்வதில்லை. அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கவுன்சிலிங் கொடுக்கும் வகையில் 800 மருத்துவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.