தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் - மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் வேண்டுகோள் ! - ANBIL MAHESH POYYAMOZHI

கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என மத்திய அமைச்சருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2025, 11:25 PM IST

திருச்சி:இருமொழிக் கொள்கையால் தமிழகத்தில் என்ன தீங்கு ஏற்பட்டுள்ளது? மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துவது ஏன்? பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால் தான் நிதி விடுவிக்கப்படும். ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து தமிழக அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று(பிப்ரவரி 15) செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், “ மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. ரூ. 2,158 கோடியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும். ரூ.19 கோடி செலவில் அனைத்து அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு குறித்து பயிற்றுவிக்கிறோம். ஆனால், தற்போது SSA நிதி நிறுத்தப்பட்டுள்ளதால் அதனை தொடர இயலவில்லை.

இதையும் படிங்க:"நாட்டுக்கே நான் தான் பாதுகாப்பு...எனக்கு எதுக்கு பாதுகாப்பு?" - சீமான் கேள்வி!

மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறது. இந்த இருமொழிக் கொள்கையால் தமிழகத்தில் என்ன தீங்கு ஏற்பட்டுள்ளது? இஸ்ரோவில் பணிபுரியும் நாராயணன் உள்ளிட்ட பலரும் தமிழக அரசு பள்ளியில் பயின்றவர்கள் தான். இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் தமிழ் வழி பயின்ற மாணவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து வருகிறார்கள்.

மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துவது ஏன்? கேவி எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதேசமயம் சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் என சட்டம் இயற்றியுள்ளோம்.

கடந்தாண்டு தமிழ் வழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் புத்துணர்வு முகாம் நடத்தியுள்ளோம். தமிழ் சார்ந்த பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், பள்ளி மாணவ, மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு சொந்த நிதியில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி வருகிறது. கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்.

மத்திய அரசிடமிருந்து கல்விக்கான நிதியை பெறுவதற்கு தமிழக முதலமைச்சருடன் கலந்து பேசி நீதிமன்றத்தை அணுகுவதா?இல்லையா? என முடிவெடுப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details