கோவை:உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், 'பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று (பிப்.17) மாலை முதல் இரவுவரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று மேடையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், '3 நாட்கள் திமுகவின் 68,000 பாக முகவர்களுக்கும், 6,80,000 பூத் கமிட்டி உறுப்பினர்களுக்குமான கூட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.
பாசிசம் சரியத் தொடங்குவதற்குக் காரணம் மு.க.ஸ்டாலின் என்றும், மாநில உரிமையைப் பற்றி தொடர்ந்து பேசி வருவதும்தான் காரணம். திராவிட மாடல் அரசின் 33 மாதங்களில் 1,339 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்த அரசாக உள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழ் மொழியில் அர்ச்சனை எனக் கொண்டு வந்து, "சுக்லா பரதம்" என்ற சமஸ்கிருத துதியையும் பாடி, சமஸ்கிருதம் புரியவில்லை, "பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன்" என தமிழில் கூறினால்தான் எனது தமிழ்க்கடவுளுக்குப் புரியும்.
நாமெல்லாம் ஏதோ ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தத் துடிக்கிறது இந்த பாசிச அரசாங்கம். இதை முறியடிக்கவேண்டும். நண்பர்களாக இருந்த தீரன் சின்னமலையும், திப்புசுல்தானும் ஆங்கிலேயர்களை விரட்டியடித்தது தமிழ்நாட்டை மட்டுமே காப்பதற்காக அல்ல. இருவரும், ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து காக்க வேண்டுமெனப் போராடியவர்கள்.
இப்படி இஸ்லாமியர்கள், இந்து போன்றவர்கள் ஒற்றுமையாக நமது நாட்டைக் காத்தனர் என்று சொல்லும்போது, அதற்கானப் பிரிவினையைக் கொண்டுவர நினைப்பவர்களே பாசிச பாஜக. இவர்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய ஆட்சியாகவே அதிமுக ஆட்சி இருந்தது. மாநில உரிமைகளை அதிமுக மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டது.