தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளின் நிலை என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள 15 மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Anbil Mahesh Poyyamozhi
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2024, 10:53 PM IST

சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பள்ளிகளின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று (டிச.03) ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் சோ.மதுமதி, பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் பூ.அ.நரேஷ், இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியபோது, "தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் பள்ளிகளின் தற்போதைய நிலை குறித்தும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் மரங்கள் விழுந்திருப்பின் அதனை உடனடியாக அகற்றிட வேண்டும் மற்றும் மழையால் பள்ளிக் கட்டடங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட மாவட்டத்திற்கு சென்று ஆய்வு செய்து அதன் அறிக்கையினை பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கிட வேண்டும்.

குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூரில் தென்பெண்னையாற்றின் அதிக நீரோட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தற்போதைய நிலையினை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், மின் இணைப்புகள் பள்ளிகள் தொடங்கும் முன்பு முறையாக பரிசோதிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் நோட்டுப் புத்தகங்கள், பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் பள்ளிகளில் பாரமாக்கப்படும் பதிவேடுகள் எவையேனும் பாதிக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.

இதையும் படிங்க:பள்ளியை சூழ்ந்த வெள்ளநீர்.. தற்காலிகமாக மூடப்பட்ட சாலை.. விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் மழை பாதிப்புகள்!

இதனைத் தவிர்த்து, மழையால் பாதிக்கப்பட்ட பள்ளி வளாகங்களில் விஷப்பூச்சிகள், பாம்புகள் போன்றவை இல்லாததையும் உண்டு உறைவிடப் பள்ளிகள், KGBV பள்ளிகளின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு அத்துறைகளின் கீழ் வரும் பள்ளிகள், விடுதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட வேண்டும்.

மேலும், சேதமடைந்த விளையாட்டு மைதானங்களை சீரமைக்கவும், பள்ளி வளாகங்களில் உள்ள குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தவும் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மழையால் சேதமடைந்த கட்டடங்களின் அருகில் மாணவர்கள் செல்லாமல் இருக்கவும், பள்ளிக்கு மாணவர்கள் தடையின்றி வருவதற்கு போக்குவரத்து வசதிகளை உறுதிசெய்திடவும்.

இதுமட்டும் அல்லாது, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் மாணவர்கள் அதன் அருகில் செல்லாத வண்ணம் மாணவர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்கிட வேண்டும். மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வசதி வழங்குவதை உறுதி செய்வதோடு, மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்" என அறிவுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details