கரூர்: கடந்த 23-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் வாங்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுப்பரிசல் துறை விநாயகர் கோயில் பின்புறம், பெயர் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஒருவர், உடலில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதாக, வாங்கல் கிராம நிர்வாக அலுவலர் பூர்ணிமா வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாங்கல் காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றிய கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சடலமாக மீட்கப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு இளைஞரை வாங்கல் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியதாக, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.
இதனை அடுத்து, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவை அடிப்படையாக வைத்து, வாங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரை இருசக்கர வாகனத்தை திருடியதாக நிர்வாணப்படுத்தி, மரக்குச்சியால் அடித்தும், கழுத்தில் காலை வைத்து மிதித்து கொடூரமாக தாக்கியதாக தெரியவந்ததுள்ளது.