தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அரசு ஊழியர்களின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல" - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்! - MADRAS HIGH COURT

அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 8 hours ago

சென்னை:கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப்பொறியாளராக பணியாற்றிய காளிப்ரியன் என்பவரின் சொத்துகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், இந்த தகவல்கள் அரசு ஊழியரின் தனிப்பட்ட விவரங்கள் எனவும், அவை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் விலக்களிக்கப்பட்டவை என்றும் கூறி, தகவல்கள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சீனிவாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (டிச.23) நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, தகவல் உரிமைச் சட்டம் 8-வது பிரிவின்கீழ் சில தனிப்பட்ட தகவல்கள் வழங்க விலக்களிக்கப்பட்டுள்ளது என்றும், அரசு பணி சார்ந்த தகவல்களை வழங்கலாம் எனவும், அரசு ஊழியர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது அடிப்படை உரிமை எனவும் வாதிட்டார்.

இதையும் படிங்க:பெங்களூரில் இருந்து சென்னைக்கு மூட்டை மூட்டையாக வந்த போதைப் பொருள்.. வேலூரில் சிக்கியது எப்படி?

அதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கச் செய்யும் தகவல்கள் பாதுகாக்கப்பட்டவை தான் என்ற போதும், அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும், அவை பொதுமக்கள் பரிசீலனையில் இருந்து பாதுகாக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல எனக் கூறிய நீதிபதி, தகவல்கள் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரத்தை மீண்டும் மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பிய நீதிபதி, சட்டப்படி மீண்டும் பரிசீலித்து இரண்டு மாதங்களில் மனுதாரருக்கு விவரங்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details