தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ-பாஸ் இல்லாமல் ஊட்டி, கொடைகானலுக்கு போக வேண்டாம் - நீதிமன்றம் உத்தரவு! - E PASS

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் (E-pass) பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 7:36 AM IST

சென்னை:ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் எத்தனை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லலாம்? என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்களை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகை குறித்த புள்ளி விவரங்களை சேகரிப்பதற்காக ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகினர். அதைத் தொடர்ந்து, அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வுசெய்த நீதிபதிகள், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்குக் குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் வந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு சுற்றுலாப் பயணிகள் இவ்விரு இடங்களுக்கும் வருகை தந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை சுட்டிக் காட்டினார்.

இதையும் படிங்க: அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக பேரணி; அனுமதிக்க கோரி நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி முறையீடு!

மேலும், இரு மாவட்ட ஆட்சியர்களும் அளித்த அறிக்கையில் கூறியுள்ள புள்ளி விவரங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், அது தவறான முடிவுக்கு வழி வகுத்து விடும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து பதிலளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை தன்னிச்சையாக புகைப்படம் எடுக்கும் கேமராக்களை பொருத்த இருப்பதால், இனிமேல் முழுமையான புள்ளி விவரங்கள் கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, உண்மையான புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இ-பாஸ் இல்லாமல் எந்த வாகனமும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இ-பாஸ் உள்ள வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும், இ-பாஸுக்கு விண்ணப்பிக்கும் போது அந்த விண்ணப்பத்தில் உரிமம் பெற்ற ரிசார்ட்கள், ஹோட்டல்கள் குறித்த விபரங்களை சேர்க்க முடியுமா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, இ-பாஸ் நடைமுறை சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்துவதற்கு அல்ல எனத் தெளிவுபடுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details