தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி! - MADRAS HIGH COURT

வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2024, 7:42 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வரும் சூழ்நிலையில், காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கில் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கைத் தள்ளிவைத்தனர்.

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் நீதிமன்றங்களில் சுருக்கெழுத்தர், தட்டச்சர், உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

தற்போது, தமிழ்நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், "மாநிலத்தில் 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில், அனுமதிக்கப்பட்ட சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் 230 பணியிடங்களில், 11 இளநிலை உதவியாளர்கள், இரண்டு சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் என 13 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக" தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகளுக்கான தடை நீட்டிப்பு.. ஐகோர்ட் உத்தரவு!

"மேலும், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை எனவும், மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் காலியாக இருந்த இரு சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கும், 14 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்" அந்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பதிவு செய்த நீதிபதிகள், தாலுகா நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களைச் சுட்டிக்காட்டி, நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய ஏதுவாக விசாரணையை ஜனவரி 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details