சென்னை:செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்திற்கு எப்படிக் கொண்டு செல்லப்படுகிறது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமரவில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.புகழேந்தி, செல்ஃபோன் வைத்திருந்ததாகக் கூறி இருவரையும் சிறைத்துறை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கியதாகவும், அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனவும் கூறினார்.
இதையும் படிங்க:'உறவினர்களின் பராமரிப்பில் இருந்தாலும் முதியோர் பென்சன் தேவைப்படலாம்' - கோர்ட் வழங்கிய தீர்ப்பு!
அதற்கு மறுப்பு தெரிவித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ் திலக், சிறையில் திடீரென சோதனை நடத்திய போது செல்ஃபோன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதனால் சிறைத்துறை அதிகாரிகள் மீது பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மற்றும் பிரகாஷ் ஆகியோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்களுக்கு தேவையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, மருத்துவ குழுவினரை நியமித்து மூவரின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்து ஜனவரி 21ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன்-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தடை செய்யப்பட்ட செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் எப்படி சிறைக்குள் செல்கின்றன? என்பது குறித்து சிறைத்துறை டிஜிபி அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.