தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத் துறையினரின் வழக்கு ரத்து செய்ததது சென்னை உயர் நீதிமன்றம்! - Madras High Court

Madras High Court: பிரபல கட்டுமான நிறுவனமான ஓஷன் லைஃப்ஸ்பேசஸ் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
சென்னை உயர் நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 3:06 PM IST

சென்னை: பிரபல கட்டுமான நிறுவனமான, ஓஷன் லைஃப்ஸ்பேசஸ் (OCEAN LIFE SPACES) நிறுவனத்தை எஸ்.கே பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடங்கியுள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், நிறுவனத்தில் தனக்கு உரியப் பங்கை எஸ்.கே பீட்டர் தர மறுத்ததாகக் கூறி, ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் எஸ்.கே.பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் ரூ.50 கோடி ரூபாய் வரை பணப்பரிமாற்றம் நடந்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள், ஓஷன் லைஃப் ஸ்பேஷஸ் நிறுவனம் மற்றும் எஸ்.கே.பீட்டர் வீடுகளில் சோதனை நடத்தினர்.

சோதனை அடிப்படையில் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, ஆவணங்களுடன் ஆஜராகுமாறு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பீட்டருக்கும் சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து எஸ்.கே பீட்டர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘இருவருக்கும் இடையேயான தொழில் பிரச்சனையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு. சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களைத் திருப்பித்தர அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். தங்கள் நிறுவனத்தின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் சுந்தரமோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டுமான நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “நிறுவனத்துக்கு எதிராகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணையைத் தொடர முடியாது என வாதிட்டார்.

இதனையடுத்து, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மூல வழக்கான மத்திய குற்றப்பிரிவு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதன் தொடர்ச்சியாகப் பதியப்பட்ட வழக்கை அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரிக்க முடியாது என்று கூறி அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாரர் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை நான்கு வாரங்களில் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஒரு வேளை மத்திய குற்றப்பிரிவு, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டால், அமலாக்கத் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:துரை வைகோ மீது அதிருப்தியா? கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூறுவது என்ன? - திருச்சி கள நிலவரம்! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details