சென்னை:ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்தனர்.
இதுதொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், “போதைப்பொருள் கடத்தில் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே சிறையில் இருந்ததால் உடனடியாக அவரை காவலில் எடுக்க முடியவில்லை. அதன் பின்னர் சிறை மாற்ற உத்தரவு பெற்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது” இவ்வாறு கூறினார்.