சென்னை: தமிழக மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2002-2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார். அப்போது இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
பின்னர் இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும் அமலாக்கத்துறைக்கு சென்றது. பின்பு, அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட அவருடைய குடும்பத்தினர் 7 பேருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அமலாக்கத்துறை அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தது.
பின்னர் அவரது சொத்துக்களையும், அவருடைய குடும்பத்தினரின் சொத்துக்களையும் கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது. சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.