தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதாளச் சாக்கடை நடைமுறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - Manual Scavenging - MANUAL SCAVENGING

Manual Scavenging: பாதாளச் சாக்கடைகளில் மனிதர்களை இறக்குவதைத் தடுக்கும் வகையில், இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Manual Scavenging
Manual Scavenging

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 7:17 PM IST

சென்னை:பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிக்கு மனிதர்களைப் பயன்படுத்தக் கூடாது, விஷவாயு தாக்கி பலியானவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டும், பாதாளச் சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த 2017 ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாடு சுதந்திரமடைந்து 46 ஆண்டுகளுக்குப் பின் பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்கு மனிதர்களைப் பயன்படுத்தத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மனிதத் தன்மையற்ற இந்த நடைமுறையை ஒழிக்க இந்த சட்டத்தைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்த போதும், பாதாளச் சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கும் நடைமுறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், இன்னும் இந்த நடைமுறை அமலில் இருப்பதை ஒழிக்க முடியவில்லை என வேதனை தெரிவித்தனர். மேலும், இந்த நடைமுறையை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாதாளச் சாக்கடைகளில் மனிதர்களை இறக்குவதைத் தடுக்கும் வகையில், இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். பின்னர், பாதாளச் சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தூய்மைப் பணிகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.

பாதாளச் சாக்கடைகளில் மனிதர்களை இறக்கத் தடை விதிக்கும் 2013 ம் ஆண்டு சட்டத்தைக் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, பாதாளச் சாக்கடைகளில் இறங்கி உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு தற்போது 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. படுகாயமடைந்தவர்களுக்குக் காயத்துக்கு ஏற்ப 20 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.

இந்த இழப்பீட்டுத் தொகையை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதனை அதிகரிக்க வேண்டும் எனவும், பலியாவோரின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவுகளை அரசு முழுமையாகப் பின்பற்றும் என நம்பிக்கை தெரிவித்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5 ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்து; ஹெச்.ராஜா மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்ய மறுப்பு! - Chennai High Court

ABOUT THE AUTHOR

...view details