சென்னை: கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கி முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் போதிய ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு கடந்த 3 மாதங்களாக நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்தால் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி பிப்.7 ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து விசாரணை செய்யத் தலைமை நீதிபதி அனுமதி அளித்ததையடுத்து, அமைச்சர் பெரியசாமி மீதான வழக்கின் இறுதி விசாரணை (பிப்.12) தொடங்கியது.
அப்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில், "முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சர்களை நியமிக்க ஆளுநர் ஒப்புதல் வழங்குகின்றார். அதனால், அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த அனுமதி வழங்க ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சபாநாயகருக்கு இல்லை. அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாகவே அனுமதி வழங்கியுள்ளார். அதனால், சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது சரிதான்" என வாதம் செய்தார்.
இந்த வழக்கு இன்று (பிப்.13) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அமைச்சர்கள் மீதான வழக்கை விசாரிக்க யார் அனுமதி தர வேண்டும். ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? சபாநாயகருக்கு உள்ளதா? என விளக்கமளிக்க அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை இடையில் விடுதலை செய்ய நடுவர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.
முழுமையான விசாரணைகள் முடிந்த பின்னரே, ஆவணங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை வழக்கிலிருந்து விடுவிக்க உரிமை உள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து ட்ரையல் நடத்தாமல் இடையில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது.