சென்னை:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக 2023 மார்ச் 20ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து அங்குச் சோதனையில் ஈடுபட்ட போலீசார் அங்கு நின்றிருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த கிராண்ட் விக்டர் இகேனா என்பவரிடம் சோதனை நடத்தியபோது அவரிடம் 59 கிராம் மெதபெடமின் என்ற போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போதைப் பொருளைப் பறிமுதல் செய்த போலீசார் கிராண்ட் விக்டர் இகேனாவை கைது செய்து அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தனக்கு ஜாமீன் கோரி அவர் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவில், கைது செய்யப்பட்டு 180 நாட்கள் ஆன நிலையில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, தனக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராண்ட் விக்டர் இகேனா சார்பில் வழக்கறிஞர் எஸ்.பிரவீன்நாத் ஆஜராகி, மனுதாரர் கைது செய்யப்பட்டு 180 நாட்கள் ஆன நிலையில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், அவருக்குச் சட்டப் பூர்வ ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
அரசுத் தரப்பில் அரசு வழக்கறிஞர் பிரதாப் ஆஜராகி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட விசாரணை நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பே ஜாமீன் கோரித் தாக்கல் செய்த ஜாமீன் மனு ஏற்கத்தக்கதல்ல என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போதைப் பொருள் தடுப்பு வழக்கில் 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவர் சட்டப்பூர்வமான ஜாமீன் கோர முடியும். இந்த வழக்கில் 184 நாட்கள் முடிந்த நிலையில் மனுதாரர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில் 180 நாட்களுக்கு முன்பே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி அரசுத் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை நீதிமன்றம் 180 நாட்கள் ஆவதற்கு முன்பே விசாரித்து முடிவெடுத்திருக்க வேண்டும்.
ஆனால், அப்படிச் செய்யாமல் இரு மனுக்களையும் தாமதமாக விசாரித்து விசாரணை நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரியது தொடர்பாக விசாரணை நீதிமன்றம் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. அரசுத் தரப்புக்கு வாய்ப்பு தருவதற்காகக் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வேண்டுமென்றே தள்ளிவைக்கக் கூடாது என்று கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்த வழக்கிலும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் கோர உரிமை உள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கான இருநபர் உத்தரவாதத்தில் ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய 'AI' - ஜெயலலிதாவின் குரலில் ஈபிஎஸ் வெளியிட்ட ஆடியோ!