சென்னை:அண்ணா பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மாணவி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என பெண் வழக்கறிஞர் வரலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், “இந்த சம்பவம் தொடர்பான காவல்துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது என்ற போதிலும், வழக்கின் முதல் தகவல் அறிக்கை காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்கு மூலத்தில் மற்றொரு நபரையும் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லக்ஷ்மி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, வழக்கறிஞர் வரலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு...குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் சிக்கியது எப்படி?