தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆர்டிஇ கல்வி: பள்ளியில் இருந்து 1 கி.மீ தூரம் தாண்டி வீடு இருந்தால் சீட் மறுப்பா? உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Madras High Court - MADRAS HIGH COURT

Madras High Court: பள்ளியிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் வீடு அமைந்திருந்தாலும் காலியிடங்கள் இருந்தால் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டுமென கோவையை சேர்ந்த பள்ளி நிர்வாகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 3:26 PM IST

சென்னை: கோவையை சேர்ந்த இளங்கோ என்பவர் அவரது மகளுக்கு கட்டாயக் கல்வி (ஆர்டிஇ) சட்டத்தின் கீழ் சேர்க்கை கோரி தனியார் பள்ளிக்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் பள்ளி அமைந்துள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் அவரது வீடு அமைந்துள்ளதாக கூறி அவரது மகளுக்கு சேர்க்கை வழங்க பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதேபோல, கோவையை சேர்ந்த தீபக் என்பவரது மகளுக்கும், இதே காரணத்தைக் கூறி பள்ளியில் சேர்க்கை மறுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனு தாரர்கள் சார்பில் வழக்கறிஞர் D.முத்து ஆஜராகி, ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் வீடு அமைந்து இருந்தாலும், குறிப்பிட்ட இரண்டு பள்ளிகளிலும் 25 சதவீத இடங்கள் காலியாக உள்ளதால் சேர்க்கை அனுமதிக்க உத்தரவிட வேண்டுமென வாதிட்டார். கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சார்பில் அரசு வழக்கறிஞர் எம்.ராஜேந்திரன் ஆஜராகி, பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் இரு மாணவிகளின் சேர்க்கை விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி மனுதாரர்கள் இருவரையும் 20ஆம் தேதி பள்ளி நிர்வாகத்தை அணுக உத்தரவிட்டார். மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:எஸ்.ஆர்.எம் ஹோட்டல் விவகாரம்; ரூ.38 கோடி நிலுவை - சுற்றுலாத்துறை தகவல்! - TRICHY SRM HOTEL ISSUE

ABOUT THE AUTHOR

...view details