தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டி.பி.ஜெயின் கல்லூரியில் அரசு உதவி பாடப்பிரிவுகளை முடக்கலாமா? - உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

மாணவர்கள் சேரவில்லை என்பதற்காக அரசு உதவி பெறும் இளநிலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளை டி.பி.ஜெயின் கல்லூரி மூடுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மற்றும் கல்லூரி நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை : சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரி நிர்வாகம், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளான 5 இளநிலை பாடப்பிரிவுகள் மற்றும் 2 முதுகலை பாடப்பிரிவுகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு முதல் மாணவர்கள் சேரவில்லை என்பதாலும், ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை என்பதாலும், இந்த பாடப்பிரிவுகளை அரசிடம் ஒப்படைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்லூரி நிர்வாகம் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கல்லூரி நிர்வாகம் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை அரசிடம் ஒப்படைப்பு செய்தால் அதையேற்று தமிழக அரசு இரு வாரங்களில் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனுதாரராக மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "துரைப்பாக்கம், கண்ணகிநகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

இதையும் படிங்க :ஜிஎஸ்டி வரிவிலக்கு கேட்கும் ஹாரிஸ் ஜெயராஜ்; வரி விலக்கு சாத்தியமா?... ஒரு பார்வை

அந்த பகுதியில் இயங்கி வரும் டி.பி.ஜெயின் கல்லூரியில் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுவது என்பது ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்பு மற்றும் எதிர்காலத்தை பாதிக்கும். அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் மூடப்பட்டால் அந்த கல்லூரி நிர்வாகம் உடனடியாக வணிக ரீதியில் சுயநிதி பாடப்பிரிவுகளை தொடங்கி விடும்.

மேலும், அந்த கல்லூரி சிறுபான்மையினர் கல்லூரி என்பதால் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மட்டுமே விசாரிக்க முடியும். எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து அதை ரத்து செய்ய வேண்டும். அந்த கல்லூரியில் ஏற்கனவே இயங்கி வரும் அந்த பாடப்பிரிவுகளை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த வழக்கானது நீதிபதிகள் பி.பி.பாலாஜி, ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.16க்கு தள்ளி நீதிபதிகள் வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details